மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த மண்டல அளவிலான கருத்தரங்கு; நாளை நடக்கிறது!
தமிழகம் முழுவதும் பயிரிடப்படும் தானிய பயிர்களில் மக்கச்சோளம் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த மக்காச்சோளத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஸ்போ டாப்டீரா ப்ருஜிபெர்டா என்ற படைப்புழுவின் தாக்குதல் அதிகமாக உள்ளது. அமெரிக்காவை தாயகமாக கொண்ட இப்படைப்புழுவானது இந்தியாவில் முதன் முதலாக கர்நாடகா மாநிலம் சிவமோகா பகுதியில்
கண்டறியப்பட்டது. தற்போது பிற மாநிலங்களிலும் பரவியுள்ளது. இதை கட்டுப்படுத்தும் நோக்கோடு தமிழக அரசு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறப்பு திட்டத்தின் வாயிலாக கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள நிதி உதவி வழங்கியது. அதன் பலனாக இப்புழுவானது தற்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்புழுவானது வரும் காலங்களில் மேலும்
பரவாமல் இருக்கும் பொருட்டு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புழுவை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களை பயிற்சி வாயிலாக அளிக்கவும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் திருச்சி மண்டல உழவர்களுக்கான கருத்தரங்கு நாளை (18ம் தேதி) நடைபெற உள்ளது. இதில்
திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை, துணை, உதவி இயக்குநர்கள், வேளாண் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்புத்துறை இயக்குநர், திட்ட ஆலோசகர், கல்லூரி முதல்வர், பேராசிரியர், தலைவர்கள், வேளாண் அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்று தொழில்நுட்பங்களை விளக்க உள்ளனர்.