மண்டல அளவிலான வர்த்தக தொடர்பு பணிமனை; கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்!
திருச்சி கலையரங்கில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான வர்த்தகத்

தொடர்புப் பணிமனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, கண்காட்சியைப் பார்வையிட்டு, பயிற்சிக் கையேட்டினை வெளியிட்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு பேசுகையில், தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் 2019-20ம் ஆண்டு முதல் திருச்சி மாவட்டத்தில் 4 உபவடிநீர் பகுதிகளில் 9.68 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி அவற்றை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக ஒருங்கிணைத்து
திருச்சி மாவட்டத்தில் நான்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது. இரண்டு மடங்கு மகசூல் மூன்று மடங்கு வருமானம் விவசாயிகள் பெறுவதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அனைத்து தொழில் நுட்ப உதவி மற்றும் தேவையான நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். இந்த பணிமனையில் உழவர்கள் இயற்கை முறையில் விவசாயம் செய்து உற்பத்தி செய்த கம்பு, கேழ்வரகு, திணை, வரகரிசி உள்ளிட்ட திணை வகைகள்
கடலை உள்ளிட்டவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய், உணவு பொருட்கள் மற்றும் வாழையில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்புக்கூட்டு பொருட்கள் முளைகட்டிய சிறுதானிய வகைகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அப்போது துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சரவணன் மற்றும் பலர் உள்ளனர்.