மலைக்கோட்டை கடைகளில் வாடகை பாக்கி வசூல் தீவிரம்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில், மலைவாசலில் 48 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கு 2016ம் ஆண்டு முதலே வாடகை பாக்கி இருந்து வந்தது. இவ்வாறு கோயிலுக்கு வர வேண்டிய வாடகை பாக்கி தொகை ரூ.5.57 கோடியாக இருந்தது. இதுகுறித்து கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும், செலுத்தாததால் வாடகை பாக்கி குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தோடு,
சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது. இந்நிலையில் மலைக்கோட்டை கோயில் நிர்வாகம் திடீரென்று வசூலில் வாடகை தீவிரம் காட்டத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் 70 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து உதவி ஆணையரும், செயல் அலுவலருமான விஜயராணி கூறுகையில், வாடகை வசூல் ஏற்கனவே தொடங்கி நடை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை 70 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி வசூலானது இனி வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றார்.