ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0; 2 பேர் கைது!
தமிழகத்தில் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்கு வகையில் ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டத்தின்படி கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனைத்து மாநகர, மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு கடந்த 29ம் தேதி
உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், காந்திமார்க்கெட், கோட்டை, கே.கே.நகர் பகுதி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு கஞ்சா விற்பனை செய்த 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதுபோல் 2வது நாளாக மாநகரில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில்
எ.புதூர் போலீசார் நடத்திய சோதனையில் ராம்ஜிநகர் மில்காலனி பெரிய தெருவில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன்(வயது 43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் பாலக்கரை போலீசார் நடத்திய சோதனையில்,
மணல்வாரித்துறை ரோடு தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்ற சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவை சேர்ந்த விக்கி (என்கிற) டேனியேல் விக்கி(வயது 22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.