“கூடுதல் மருத்துவ கட்டிடம் கேட்டு” மேயர், ஆணையரிடம் 23வது வார்டு கவுன்சிலர் மனு!
திருச்சி மாநகராட்சி 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் குமார் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகனை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி மாநகராட்சி வார்டு எண்.23ல் அமைந்துள்ள காந்திபுரம்-நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தினசரி வெளிநோயாளிகள் சுமார் 200 பேர் மற்றும் உள்நோயாளியாக 50 முதல் 60 பேர் வரை மாதம் தோறும், மகப்பேறு மருத்துவம் மாதத்திற்கு 3 முதல் 4 வரை குழந்தை பிறப்பும் நடைபெற்று வருகிறது. உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு போதுமான இடவசதி

மற்றும் படுக்கை வசதிகள் இல்லை. பொதுக்கழிப்பிட வசதியும் போதுமானதாக இல்லை. ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலேயே மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் கூடுதல் கட்டிடம் எழுப்பவும், உரிய கழிப்பறை வசதிகள் அமைக்கவும், பணியாளர் மற்றும் அலுவலர் ஓய்வு அறை அமைக்கவும் உரிய பரிந்துரைகள் செய்து பொது மக்களுக்கு சிறப்பான நலம்பேறும் சிகிச்சை கிடைத்திடுவதை அதிகப்படுத்திட உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருச்சி மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமானிடமும் கோரிக்கை மனு அளித்தார். மனுக்களை பெற்றுக்கொண்ட மேயரும், ஆணையரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.