திருச்சி டிவிஎஸ் டோல்கேட் இப்ராகிம் காலனியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 56). உதவி ஆய்வாளர். இவரது கணவர் நடராஜன். இவர் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஆவார். இவர்களுக்கு லெனின்(26), பரத்(22) என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திலேயே உள்ள நிரந்தர காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். ஆதிலட்சுமி திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவல் சரகம் பகுதியில் இயங்கிவரும் காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் உதவி
ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று காலை ஆதிலட்சுமி தனது அறையைவிட்டு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் கதவை தட்டிப்பார்த்தார். கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அறையில் இருந்த மின் விசிறியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் ஆதிலட்சுமி பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடராஜன் உடனே இதுகுறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல்
தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆதிலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ஆதிலட்சுமி இரண்டு வங்கிகளில் கடன் பெற்று உள்ளதாகவும், சர்க்கரை நோய் காரணமாக அவர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.