குவாரி நீரில் மூழ்கி பள்ளி மாணவி பலி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கொட்டப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் – ராணி தம்பதியரின் மகள் கௌசிகா (வயது 14). இவர் கரூர் மாவட்டம், தேகைமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டருகே உள்ள கல்குவாரியில் உள்ள குளம்போல் தேங்கியுள்ள தண்ணீரில் இன்று மாலை துணி துவைப்பதற்காக சென்ற தனது அத்தை தனக்கொடி என்பவருடன் குளிக்கச் சென்றுள்ளார்.
தனக்கொடி துணி துவைத்துக்கொண்டிருந்தபோது ஒரு ஓரமாக தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த கௌசிகா எதிர்பாராத விதமாக நீருக்குள் மூழ்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அத்தை தனக்கொடி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கி சிறுமியை தேடியுள்ளனர். பின்னர் மணப்பாறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
