கார்த்திகைப்பட்டி தொடக்கப்பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கல்!
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள கீழ கார்த்திகைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியாக இருந்தாலும் தனியார் பள்ளிக்கு இணையாக பள்ளியின் கட்டிட அமைப்பு சுகாதார அமைப்பு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுககள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளி தலைமை ஆசிரியராக கீதாராணி பணியாற்றி வருகிறார். இவர் இப்பள்ளியில் வருகிற 2022-2023ம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் சேரும் மாணவ- மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை வழங்கி வருகிறார். மேலும் இவர் இப்பள்ளியில் படிக்கும் 15 குழந்தைகளுக்கு மாதாமாதம் தபால் நிலையத்தில் சேமிப்பு பணம் தனது சொந்த செலவில் செலுத்தி வருகிறார். இப்பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை தொடக்க விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் மற்றும்
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் சேகர் அடைக்கலம் மற்றும் தமிழ்ச்செல்வன், வார்டு உறுப்பினர் விஜயா, ஊர்முக்கிய பிரமுகர்கள் பெரியசாமி,மந்திரம் ஆகியோர் விழாவில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியை கீதா ராணி சார்பில் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரேமா உள்பட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் உதவி ஆசிரியர் மோகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.