தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சி மாவட்டம் துறையூர் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
துறையூர் தீயணைப்பு துறையினர் சார்பாக அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது. தற்போது வெயில் காலம் என்பதால் அரசு மருத்துவமனைகளில் மின் கசிவு மற்றும் தீ விபத்துகள் ஏற்படும் பொழுது நோயாளிகளை எவ்வாறு பாதுகாப்பாக வெளியே கொண்டுவர வேண்டும் மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றில் தீ விபத்து ஏற்படும் பொழுது அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்.
மேலும் தீ விபத்து ஏற்படும்பொழுது நோயாளிகளை பதட்டம் இல்லாமல் எவ்வாறு வெளியே கொண்டு வருவது என்பது குறித்தும் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துறையூர் அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.