கல்யாணசுந்தரர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு நாள் நிகழ்ச்சி
தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் தண்ணீர் துறை தெருவில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்ட கல்யாணபாலாம்பிகை உடனுறை கல்யாணசுந்தரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் மண்டலாபிஷேக நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு காலை சிறப்பு யாக வேள்விகளும், பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் சிவனடியார்கள் கலந்துகொண்ட திருவாசக பக்தி பாராயணம் நிகழ்ச்சி மேளதாளத்துடன் நடைபெற்றது. இதில் பாலசமுத்திரம் மற்றும் தொட்டியம் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.