முன்விரோதம் காரணமாக பெண்ணிற்கு அரிவாள் வெட்டு…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள களத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்த 5 பவுன் நகை திருட்டு போனது. இந்த நகையை பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவிச்சந்திரன் மனைவி விஜயலட்சுமி (43) என்பவர் திருடி சென்றிருக்கலாம் என முருகேசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதற்கிடையே அருகில் உள்ள ஆலம்பட்டிபுதூர் பேக்கரியில் முருகேசன் டீ குடிக்க சென்றார். அப்போது விஜயலட்சுமி அந்த பேக்கரி பகுதிக்கு வந்தார். இதையடுத்து மீண்டும் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த முருகேசன் முள் வெட்டுவதற்கு கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து விஜயலட்சுமி கழுத்தில் ஓங்கி வெட்டினார். மேலும் அவரது கையிலும் அரிவாள் விட்டு விழுந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து முருகேசனை பிடித்து அடித்து உதைத்தனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த விஜயலட்சுமி மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த முருகேசன் ஆகிய இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக ராம்ஜி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நகை திருட்டுப் போன விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.