பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் சாதகமா? பாதகமா? – விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

0 764
Stalin trichy visit

சென்னை கோயம்பேடு, மதுரை மாட்டுத்தாவணி, போல திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட வருட கோரிக்கையாக இருந்து வந்தது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக திமுக ஆட்சி காலத்தில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை அப்போது துணை முதல்வராக இருந்த மு.க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிலையில் அப்போது திமுக தோல்வியுற்றதால் அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருச்சி மாநகரம். இங்கிருந்து மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் சில மணி நேரங்களில் சென்றுவிடலாம். திருச்சி மத்திய பேருந்து நிலையம் வழியாக தினமும் 2,500-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால், மாநகரிலும், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்பகுதி சாலைகளிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்தநிலையில் தற்போது பதவி ஏற்றிருக்கும் திமுக அரசு மீண்டும் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு திருச்சி அமைச்சர்கள் என அனைவரும் ஆய்வினை முடித்த நிலையில் இன்னும் சில காலங்களில் பணிகள் தொடங்க உள்ளது…

இந்த நிலையில் பஞ்சப்பூரில் ஒன்றிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஏற்ற இடம்தானா? சாதகமா? பாதகமா? என்பது குறித்து பேசுவதற்காக திருச்சியின் மூத்த கட்டுமானப் பொறியாளர் சுந்தரத்திடம் பேசினோம். அவர் கூறிய தகவலோடு பேருந்து நிலையத்தில் நன்மைகளையும் தீமைகளையும் இந்த தொகுப்பில் காணலாம்…

ஒருபுறம்;

பல வெளி மாவட்டங்களிலிருந்தும், திருச்சி நகரத்திலிருந்தும் அனைத்து பேருந்துகளும் ஒரே இடத்தில் சேர்வது / புறப்படுவது நல்லதொரு விஷயம்தான்.

இதன் மூலம் மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

தற்போது இருக்கும் இந்த மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் நல்லதொரு விஷயத்திற்கு புதுப்பித்து பயன்படுத்தலாம்.

காலையில் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் வருவதால் அலுவலகம் மற்ற பணிகளுக்கு செல்பவர்கள் தாமதமான செல்கின்றனர்‌‌. இதனையும் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

மற்றொரு புறம்;

திருச்சியின் மக்கள் தொகையில் 70% பேர் திருவெறும்பூர், நம்பர் 1 டோல்கேட் மற்றும் நம்பர்2 டோல்கேட், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், காந்தி மார்க்கெட், தில்லை நகர், உறையூர், பாலக்கரை ஆகிய இடங்களில் வசிக்கின்றனர். இவர்கள் வெளியூர் செல்வதற்கு சுமார் 20 கி.மீ. போக்குவரத்து நெரிசலில் சென்று பஞ்சப்பூரை அடைய வேண்டும்; நேரமும் வீணாகும்.

திருச்சி பால்பண்ணை / அரியமங்கலம் அருகில் பேருந்து நிலையம் அமைத்தால் ஏறக்குறைய 12 கி.மீ. + 12 கி.மீ. மீதமாகும். ஒரு நாளைக்கு 1000 பேருந்துகள் பஞ்சப்பூரிலிருந்து இயக்கப் படுவதாக கருதுவோம்…

1000 பேருந்துகள் X 24 கி.மீ = 24,000 கி.மீ.ஒரு லிட்டர் டீசலுக்கு பேருந்து செல்லும் தூரம் = 4 கி.மீ. 24,000 கி.மீ.-க்கு ஆகும் டீசல் 6000 லிட்.
ஒரு நாளைக்கு 6000 லிட் X Rs 100 = 6,00,000/-
(செலவு ரூபாய் ஆறு லட்சம்)
ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் X 6,00,000 = 21,90, 00,000

இதற்கு மாற்றாக பால்பண்ணை அருகில் பேருந்து நிலையம் அமைத்தால் ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 22 கோடிகளை மிச்சப் படுத்தலாம். பயண நேரமும் அதிகம் மிச்சப் படுத்தலாம்.

ஆலோசனைகள்:

தற்பொழுது இயங்கிவரும் மத்திய பேருந்து நிலையத்தை ட்ரான்ஸிட் பஸ் நிலையமாக்குதல். உதாரணத்திற்கு மதுரையிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள் கடந்து செல்லும் நிலையமாக்க வேண்டும். அதனால் அங்கு இருக்கும் வணிக வளாகங்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படாது.

புதிதாக கூறியுள்ள (பால்பண்ணை அருகில்) பேருந்து நிலையத்திலிருந்து திருச்சியிலிருந்து புறப்படும் பேருந்துகளை மட்டும் செயல்பட வைத்தால் பலருக்கும் நன்மையாகும். அவ்வாறு அமைத்தால் 6 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தலாம். வெளிநாடுகளில் இருப்பதுபோல அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்கலாம்.

பஞ்சப்பூரில் தொழிற்சாலைகள் அமைத்தால் மிகவும் நல்லது. சோலார் எனர்ஜி / ப்ளூம் எனர்ஜி ஆகியவைகளை அமைத்தால் நல்லது”

என்றார்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.