ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை பெற்ற நால்வர் திருச்சி அகதிகள் முகாமில் அடைப்பு…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த நளினி உட்பட ஆறு பேரை விடுதலை செய்து நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதில் விடுதலை பெற்ற முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில் இருந்தும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையில் இருந்தும் விடுதலையான நிலையில், இவர்கள் இலங்கை செல்ல வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மீது வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த பாஸ்போர்ட் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், இவர்களது பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டது. இந்தியாவில் தங்கியிருப்பதற்கான விசா இல்லை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் சற்று முன்பு கொண்டு வந்து அடைக்கப்பட்டனர். எனவே, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்லும் வரை, நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருப்பார்கள்.
நால்வர் வருகையையொட்டி, சிறை வளாகத்தின் நுழைவாயில் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் வெடி வைத்து, முழக்கங்கள் எழுப்பி அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.