அடுத்தடுத்த விமானங்களில் வந்தவர்களிடம் ரூ.1.13 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் – 9 பேரிடம் விசாரணை
கொரோனா பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு சார்பில் சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருச்சி விமான நிலையத்திற்கும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த விமானங்களில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது விழுப்புரத்தை சேர்ந்த குமார் (35) என்ற பயணியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் ஆசனவாயில் மறைத்து பேஸ்ட் வடிவில் 475 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.22 லட்சத்து 9 ஆயிரம் ஆகும்.
இதேபோல் நேற்று காலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில் சந்தேகத்தின் பேரில் 10 பயணிகளை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஒரு பயணியிடம் தங்கம் இல்லை என்பதை உறுதி செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விடுவித்தனர். மீதம் உள்ள 9 பேர்களின் பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. இதனால் அவர்களிடம் சோதனை நடத்தியதில் 1.8 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த 9 பேரும் சங்கிலி வடிவில் தங்கத்தை அணிந்து கடத்தி வந்துள்ளனர். இந்த தங்கங்களின் இந்திய ரூபாயில் மொத்த மதிப்பு ரூ.90 லட்சத்து 2 ஆயிரம் ஆகும். திருச்சி விமான நிலையத்தில் அடுத்தடுத்து வந்த விமானங்களில் ரூ.1.13 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.