திருச்சி மத்திய சிறை முகாமிலிருந்து பல்கேரிய நாட்டு கைதி தப்பி ஓட்டம்; சினிமா பாணியில், தண்ணீர் லாரியில் பதுங்கி சென்றதாக தகவல்

0 565
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறைச்சாலையில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் வெளிநாட்டில் இருந்து போலி விசாவில் வந்தவர்கள், மோசடி வழக்கில் சிக்கியவர்கள், விசா முடிந்தும் சொந்தநாடு செல்லாமல் உள்ள இலங்கை, கென்யா, பல்கேரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட வௌிநாட்டினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் கோர்ட்டு உத்தரவுப்படியும், தண்டனை காரணமாக அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முகாம் சிறையில் உள்ள இலங்கை தமிழர்கள் சிலர் தங்களை தண்டனை காலம் முடிந்தும், சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கவில்லை எனக்கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 பேர் அதிக மாத்திரைகளை தின்று தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.
அந்த பரபரப்பு அடங்கிய சில நாட்களே ஆன நிலையில், தற்போது முகாம் சிறையில் இருந்து பல்கேரியா நாட்டை சேர்ந்த கைதி ஒருவர் தப்பி ஓட்டம் பிடித்தது சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தினமும் அதிகாலை வேளையிலே கைதிகளை கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம். அவ்வாறு கணக்கெடுப்பின்போது பல்கேரியா நாட்டை சேர்ந்த லிலியன் ஆட்ரகவ் (வய்அது 55) என்பவர் தப்பி ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஆன்-லைன் மூலம் பணமோசடி செய்த வழக்கில் சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டவர். கோர்ட்டு உத்தரவுப்படி திருச்சி சிறை முகாமில் அடைக்கப்பட்டார்.

கைதி தப்பிய தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் அருண் முகாம் சிறைக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மேலும் இது தொடர்பாக தனிப்படை அமைத்து தேடி பிடிக்க கமிஷனர் அவர் உத்தரவிட்டார். மேலும் திருச்சி கே.கே.நகர் போலீசில் ஜெயிலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் கைதி லிலியன் ஆட்ரகவ் தப்பி 2 நாட்கள் ஆகியிருக்கும் என்கிற திடுக் தகவலை சக கைதிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லிலியன் அட்ரகவ்வை பார்த்தே 2 நாள் ஆகிறது என்று கூறிய அவர்கள் இலங்கை தமிழர்கள் ஆர்பாட்டம் போராட்டம் என போலீசார் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் அதிலேயே கவனத்தில் இருந்ததால் அதனை பயன்படுத்தி அதிகாலை நேரத்தில் தப்பியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

திருச்சி முகாம் சிறைக்கு தினமும் டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டுவந்து தொட்டியில் நிரப்பி செல்வது வழக்கம். அந்த வேளையில் கைதி லாரியில் பதுங்கி தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சில திரைப்படங்களில் சிறைக்கு வரும் தண்ணீர் டேங்கில் கைதி தப்பி செல்வது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதேபோன்று தப்பிச் சென்றிருக்கலாமா? என்று முகாம் சிறை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் உளவுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசாரும் சிறை முகாமுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.