உப்பிலியபுரம் அருகே கோவில், 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை

0 562
Stalin trichy visit

கொப்பம்பட்டி நாய்க்கர் இனத்தை சேர்ந்தவர்களின் குடிபாட்டுக் கோயிலாக மேட்டுத்தெருவில் அமைந்துள்ளது காளியம்மன், ராமர் பட்டவன் கோயில் வளாகம். கோயில் வம்சாவளி பூசாரியான ராம்குமார் (26), நேற்றைய முன்தினம் மாலை வேளை பூஜைகளை முடித்து, கோயிலை பூட்டிவிட்டு அருகிலுள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று காலை கோயிலுக்கு வந்து பார்க்கையில், கோயில் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு, உள்பக்க பூட்டையும் நெம்பி உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் தர, துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார், தனிப்படை சப்இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

கோயிலை பூட்டை உடைத்த மர்ம நபர்கள், தகரப் பெட்டியில் வைத்திருந்த சாமிக்கு சொந்தமான செயின்கள் 3 உள்பட 6 சவரன் தங்க நகைகள், வெள்ளியிலான குடைகள் 2, ரொக்கம் ரூ.14,860 ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசாரிடம் பூசாரி புகாரளித்தார்.
கோயிலின் அருகிலுள்ள முத்துக்குமார் நளினி தம்பதியினர் வீட்டில், முத்துக்குமார் பணி நிமித்தம் காரணமாக திண்டுக்கல் சென்றுள்ளதால், நளினியும் குடும்பத்தினரும் இரும்பு கேட்டை பூட்டி விட்டு, மேல்தளத்திற்கு தூங்க, சென்றுள்ளனர். காலையில் கீழே வந்து பார்த்த பொழுத இரும்புகேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பிரதான கதவின் பூட்டை உடைத்து, உள்ளேயிருந்த 2 அறைகளின் பூட்டையும் உடைத்திருந்தது தெரிய வந்தது.

அறைகளில் பொருட்கள் கிடைக்காததால், அதே தெருவில் திருமிளி (55), வீட்டின் பூட்டை உடைத்திருந்தது தெரிய வந்தது. மேட்டுத் தெருவின் கடைசியில் வசிக்கும் சுப்ரமணி(40), தச்சு வேலை செய்பவர் தனது வீட்டை பூட்டி விட்டு, எரகுடியிலிருக்கும் தனது அண்ணன் மகள் திருமணத்திற்கு சென்று விட்டு, திரும்ப வந்து பார்க்கையில், வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறிக்குதித்து, கதவை உடைத்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து பீரோவிலிருந்த அரை சவரன் தோடு, வெள்ளிப்பொருட்கள், ரொக்கம் ரூ.3000 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக போலீசாரிடம் புகாரளித்தார்.

மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில், கோயில் மற்றும் மூன்று வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையில், போலீசார் அப்பகுதியில் வீட்டின் வெளியே வைத்துள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். எரகுடி, நாகநல்லூர் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கும், கொப்பம்பட்டியில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பிருப்பதாக போலீசார் சந்தேகிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.