பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேர் கைது
திருச்சி, ஜூலை 25 திருச்சியை அடுத்த ஜீயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜீயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்செந்துரை பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஆட்டோ ஒன்று, பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி விடாமல் வேகமாக வந்தது. இதனை கண்ட காவல்துறையினர் அந்த ஆட்டோவை நிறுத்தி ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே ஆட்டோவை சோதனை செய்தனர். சோதனையில் ஆட்டோவில் அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்தனர். விசாரணையில் அவர்கள் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களை எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஜீயபுரம் காவல்துறையினர் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்த மோகன் மகன் மாதவன்(22), ரயில் நிலைய சாலையை சேர்ந்த தங்கராஜ் மகன் வசந்தகுமார்(25), ஆர்.எஸ். ரோடு காவடிகாரதெருவை சேர்ந்த சார்லஸ் மகன் அஜித்குமார்(25), கீழவாசலை சேர்ந்த சிதம்பரம் மகன் மகேஷ்யாதவ்(28), ஆர்.எஸ்.ரோட்டை சேர்ந்த மோகன் மகன் சத்யராஜ்(38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.