திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது பட்டதாரி இளம்பெண்ணும், திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவர் வீட்டிலும் அவர்களுக்கு வேறு இடத்தில் வரன் பார்க்க தொடங்கினர். இதனால் இருவரும் தங்கள் காதலை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர்.
இந்தநிலையில் அந்த வாலிபர் திடீரென அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தன்னை ஒருவர் காதலித்து விட்டு, தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என்று முறையிட்டதுடன், அவர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் போலீஸ் நிலையத்தை விட்டு செல்வேன் என்று அங்கேயே போராட்டத்தை தொடங்கினார்.
உடனே அந்த இளம்பெண்ணிடம், அவருடைய காதலனின் விவரங்களை பெற்ற போலீசார், அவரை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் தனது குடும்பத்துடன் வந்து அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் தங்கள் மணவாழ்க்கையை தொடங்க சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.