வாய்க்காலில் குளிக்க முயன்றவர் வலிப்பு வந்து நீரில் மூழ்கி சாவு
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கல்பாளையம் வடக்கு ஈச்சம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்பவர் மகன் கதிரேசன்(25). இவர் தான் வளர்த்துவரும் மாட்டிற்கு புல் அறுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஈச்சம்பட்டியில் இருந்து மண்ணச்சநல்லூர்-அத்தாணி செல்லும் சாலையில் உள்ள உளுந்தங்குடி பகுதியில் இருக்கும் ஒரு வாழைத் தோட்டத்திற்கு சென்றார். அப்பொழுது அங்கு ஓடும் சிறிய வாய்க்காலில் இறங்கி உள்ளார்.
இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட வலிப்பு நோயால் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.