பெரம்பலூர் மாவட்டம், உடுப்பியம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் நெல் அறுவடை இயந்திரம் சொந்தமாக வைத்து ஓட்டி வருகிறார். திருச்சி மாவட்டம், பாலக்குறிச்சி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தங்கி அந்த பகுதியில் நெல் அறுவடை பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 14 ம் தேதி பாலக்குறிச்சியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நெல் அறுவடை இயந்திரத்தை நிறுத்தி விட்டு ஊருக்கு சென்று விட்டார். ஆனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் மாயமானது. இதுதொடர்பாக அங்கிருப்பவர்கள் வெங்கடேசுக்கு அளித்த தகவலின் பேரில் அவர் வந்து பார்த்த போது நெல் அறுவடை இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

உடனே வெங்கடேஷ் இதுதொடர்பாக வளநாடு போலீசில் புகார் அளித்தார். ஆனால் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க காலதாமதாகி வந்தநிலையில் சிலரின் உதவியுடன் வெங்கடேஷ் பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அவரது நெல் அறுவடை இயந்திரத்தை திருடிக் கொண்டு திருச்சி வழியாக சென்றது பதிவாகி இருந்தது. உடனே இதுதொடர்பாக மத்திய மண்டல ஐ.ஜி உள்ளிட்டோரிடம் சென்று மீண்டும் புகார் அளித்ததோடு சிசிடிவி காட்சிகளின் பதிவானவற்றையும் கொடுத்தார். இதையடுத்து மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் ஜனனி பிரியா மேற்பார்வையில் தனிப்படை போலீசார் வழக்கை துரிதப்படுத்தினர்.
அதன்படி சிசிடிவி காட்சிகளை வைத்தும் அதில் வாகனம் ஓட்டிச் சென்றவர்களின் படங்களை வைத்தும் நடத்திய தொடர் விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம், காட்டுக்கோட்டையைச் சேர்ந்த சின்ராஜ் (41), அரும்பாவூரைச் சேர்ந்த ரவீந்திரன்(38) ஆகிய இருவரும் தான் நெல் அறுவடை இயந்திரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில் பாடலூர் பகுதியில் திருடிச் செல்லப்பட்ட நெல் அறுவடை இயந்திரத்தை நிறுத்தி வைத்திருப்பதாக கூறியதை அடுத்து நெல் அறுவடை இயந்திரத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து வளநாடு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதேபோல் நெல் அறுவடை இயந்திரத்தை திருடிச் சென்ற சின்ராஜ், ரவீந்திரன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.