எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பிறகும், மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் கோரி மனு அனுப்பினால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை அரசுத்தேர்வுகள் இயக்குனர் உஷாராணி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மார்ச்-2021 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசமும், பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 2 முறை வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. பின்னர் திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பும் வழங்கப்பட்டது. தற்போது எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகும் சில பள்ளிகளில் இருந்து பெயர் பட்டியலில் திருத்தங்கள்மேற்கொள்ளக்கோரி இந்த அலுவலகத்துக்கு கடிதங்களும், தொலைபேசி வாயிலாக கோரிக்கைகளும் வந்த வண்ணம் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரி கடிதம் பெறப்படுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. மாணவர்கள் நலன்கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக தற்போது வழங்கப்படும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரி இந்த அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டால், அரசின் நிதிச்செலவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்படும்.
அனைத்து உயர்நிலை/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களும் மார்ச்-2021 எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இன்று(புதன்கிழமை) முதல் வரும் 11-ந் தேதி வரை இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.