தொழிலாளர் நலவாரியத்தில் கடந்த 6 மாதங்களில் 15 ஆயிரம் மனுக்கள் தேங்கி கிடப்பதாக வாரிய தலைவர் பொன்.குமார் குற்றச்சாட்டு

0 456
Stalin trichy visit

திருச்சியில் கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்டுமான தொழிலாளர் நலவாரிய பணிகள் குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு செய்து பணிகளை வேகப்படுத்தி வருகிறேன். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக நலவாரியப்பணிகள் முடங்கி கிடந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற பின்பு, பல்வேறு துறைகளில் மாற்றங்களை கொண்டு வருவதுபோல, தொழிலாளர் துறையிலும் நலவாரிய பணிகள் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என உத்தர விட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் தேங்கி கிடந்த கேட்பு மனுக்கள் மீது விரைந்ந்து நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு பலன்களை கொண்டு சேர்க்க பாடுபட்டு வருகிறோம். 50 நாட்களில் 50 ஆயிரம் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. சென்னையில் மு.கஸ்டாலின் மனுக்கள் பரிசீலனையை தொடங்கி வைத்தார்.
அதன்பின்பு, மாவட்ட வாரியாக எங்கெல்லாம் குறைபாடுகள் உள்ளதோ, அதை நிவர்த்தி செய்யும் பணிகளை நான் செய்கிறேன். திருச்சி மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, அலுவலர்களோடும், தொழிற்சங்க நிர்வாகிகளோடும் கலந்து பேசியிருக்கிறேன். திருச்சி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக திருமண உதவி, நலத்திட்ட உதவி மற்றும் கேட்பு மனுக்கள் என 15 ஆயிரம் விண்ணப்பங்கள் தேங்கி கிடக்கிறது.

இன்னும் ஒரு மாத காலத்திற்குள் சிறப்பு முகாம் அமைத்து பரிசீலனை செய்து அட்டைகள் வழங்கப்படும். தொழிற்சங்க நிர்வாகிகள் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காண்பித்தனர்.உடனடியாக நிவர்த்தி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
சில தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை பதிவு செய்கிறபோது, அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் கூட சில தொழிற்சங்கங்களுக்கு பின்புலமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினர். அவர்கள் கண்டிக்கப்பட்டனர். ஒருசார்பாக செயல்படாமல் பொதுவாக அதிகாரிகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

கணினிகள் அடிக்கடி பழுதாவதாக புகார் கூறப்பட்டது. அதையெல்லாம் மாற்றி புதிய கணினிகள் வழங்கப்படும். ஒரு மாவட்டத்தில் ஒரு தொழிலாளி கொடுத்த கேட்பு மனு ஒரு மாதக்காலத்தில் தீர்க்கப்பட வேண்டும். பெண்டிங் கூடாது என்பது முதல் அமைச்சரின் உத்தரவு ஆகும்.
வருகிற 20-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் அமைச்சர்கள் பங்கு பெறும் அளவிலான ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. துறை வாரியான பிரச்சினைகள் அப்போது பேசி தீர்க்கப்படும். அன்றைக்கு 200 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாமும் நடத்தப்படுகிறது.

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் பேருக்கு வீடு வழங்கும் அற்புதமான திட்டத்தை முதல் அமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத புரட்சிக்கரமான திட்டம் ஆகும். அத்திட்டம் குறித்தும் ஆய்வு செய்ய்யப்பட்டது. மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தொழிலாளர் நல வாரியம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது திருச்சி மாவட்ட கட்டிட தொழிலாளர் மத்திய சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் தமிழ் அழகப்பன், பொருளாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.