நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பொது இடங்களில் 3 அடி முதல் 12 அடி வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். பின்னர் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் நீர்நிலைகளில் அவை கரைக்கப்படும்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அரசு தடைவிதித்தது. அதுபோல் இந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், விசர்ஜன ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
அதேநேரம் வீடுகளில் பொதுமக்கள் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனிநபர் எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாநகரில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பதற்றமான பகுதிகளாக கருதப்படும் பாலக்கரை, காந்தி மார்க்கெட், உறையூர், அரியமங்கலம் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான பகுதிகளாக கருதப்படும் மணப்பாறை, புத்தாநத்தம் பகுதிகளில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடக்கூடாது. 3½ அடி உயரத்துக்கு மேல் சிலைகளை வைக்கக்கூடாது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் வைத்து வழிபடும் சிலைகளை அருகில் உள்ள கோவில்களில் ஒப்படைக்கலாம். அவற்றை நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.