இடிக்கப்பட்ட கோவில் சுற்றுசுவரை மீண்டும் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
திருச்சி கிராப்பட்டியில் மலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான சுற்று சுவரை அப்பகுதி மக்கள் சிலர் இடித்து பொதுப்பாதையை மாற்றினர். மேலும் கோயில் வளாகத்தில் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் கோவில் நிர்வாகம் தரப்பில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆணை பெறப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்பட்ட மலை முருகன் கோவிலுக்கு சொந்தமான சுற்றுச்சுவர் நிர்வாகத்தினரால் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
அப்போது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் சுற்றுசுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து திருச்சி மேற்கு தாசில்தார் ரமேஷ், எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரி, வருவாய் ஆய்வாளர் குமாரவேல் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் நீதிமன்ற உத்தரவை காண்பித்து பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் சுற்றுசுவர் கட்டப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.