கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
திருச்சி, டிச. 5 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே குப்பனம்பட்டியில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆறு மாதத்துக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர. இந்நிலையில் பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்ற உண்டியலில் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை செலுத்திவந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை கோவில் பூசாரி பூஜை செய்ய கோவிலுக்கு சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் கோவில் நிர்வாகிகள் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது மர்மநபர் ஒருவர் உள்ளே நுழைந்து கோவில் முன்பாக உள்ள வேலை பிடுங்கி வந்து உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வையம்பட்டி போலீசிலீ புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மர்ம நபர் கோவில் முன்பு பக்தர்கள் காணிக்கையாக நட்டு வைத்த வேலை எடுத்து வந்து உண்டியலை உடைக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.