பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை – திருச்சியில் பரபரப்பு!
திருச்சி பழைய பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21) பிரபல ரவுடி.
இவர் மீது காந்தி மார்க்கெட், தில்லை நகர் மற்றும் கோட்டை காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
இவருக்கும் வாமடம் பகுதியைச் சேர்ந்த வாழைக்காய் விஜய் என்பவருக்கும் கஞ்சா விற்பது தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பிரசாந்த் மற்றும் அவனது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து வாழைக்காய் விஜயை பட்டப்பகலில் ஓட ஓட குத்தி கொலை செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரசாந்த் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்
கடந்த மாதம் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இந்த சூழலில் இன்று அதிகாலை மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள கழிவறையில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்ற பிரசாந்தை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் பிரசாந்தை ஒட ஒட வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். பழிக்கு பழியாக நடைபெற்ற இந்த கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
