மணப்பாறையில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : பொதுமக்கள் அவதி
திருச்சி, மே 21 திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுமட்டுமின்றி பல இடங்களிலும் மழைநீர் சாலையில் தேங்கி நின்றது.
இந்நிலையில் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட சொக்கலிங்கபுரம் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் மழைநீர் முறையாக செல்ல கால்வாய் வசதி இன்றி வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் வேதனை அடைந்தனர்.
மேலும் விஷஜந்துக்களும் படையெடுத்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்து விட்டனர். இதே போல் ஜே.ஜே. நகர் உள்ளிட்ட சில இடங்களிலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். சில மணி நேர மழைக்கே இந்த நிலை இருப்பதால் மழைநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரி மக்கள் நலன் காத்திட வேண்டும் என்றும், சொக்கலிங்கபுரம் பகுதி மக்களுக்கு இதுபோன்று துயரம் நேராமல் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.