திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் கோவிந்தராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
இந்திய அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் அடுத்த மாதம்(அக்டோபர்) 6-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் தகவல் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம் அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை, துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
தபால் துறையின் பலவித சேவைகளில் குறைகள் சம்பந்தமான புகார்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை வருகிற 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கொரோனா பரவாமல் தடுக்க அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் கூகுள் மீட் அழைப்பு மூலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே தங்களுடைய புகார்களை தெரிவிக்க முன் வரக்கூடிய நபர்கள் தற்போதைய வீட்டு முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அருகில் இருக்கும் அஞ்சல் முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு தபால்களை உதவி இயக்குனர்(காப்பீடு மற்றும் புகார்), அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி-1 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.