டாக்டர்களின் தவறான சிகிச்சையால் டிரைவர் இறந்து விட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதம்

0 315
Stalin trichy visit

திருச்சி உறையூர் முத்துராஜா தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (40). கார் டிரைவர். இவர் கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்தபோது திடீரென உடம்பின் இடது பக்கம் செயலிழந்து விட்டது. இதனால் அவருடைய உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக உறையூரில் உள்ள சி.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்த அடைப்பு இருப்பதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் சங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஆனால் டாக்டர்களின் தவறான சிகிச்சையால் அவர் இறந்து விட்டதாக கூறி அவருடைய உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் இதுகுறித்து சங்கரின் மனைவி உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்று உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனைக்கு பின்புதான் அவர் தவறான சிகிச்சையில் இறந்தாரா? அல்லது உடல்நலக்குறைவால் இறந்தாரா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.