கோவிலுக்கு மண் எடுத்தவரை போலீசார் அழைத்து சென்றதால் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்து உள்ள கொட்டையூர் கிராமத்தில் டிராக்டரில் அனுமதியின்றி மண் எடுத்ததாக நடராஜன்(43) என்பவரையும், அவரது ஜேசிபி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து போலீசார் துறையூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இதனை அறிந்த கொட்டையூர் கிராம மக்கள் கொட்டையூர் கிராமத்தில் கிராவல் மண் எடுத்தது தொடர்பாக மேற்படி நபரையும், வாகனத்தையும் விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்திற்கு முன்பு சுமார் 100 பெண்கள் உள்பட 250 பேர் ஒன்று கூடி அம்மன் கோவிலுக்கு திருப்பணி நடைபெற்று வருகிறது.
அதற்காகத்தான் மண் எடுக்கப்பட்டது என்று கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் எங்கள் கோவிலுக்காக நாங்கள் சாகவும் தயங்க மாட்டோம் என்று கூறினர். இதையடுத்து உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன் குமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படவே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.