அரசு மருத்துவமனைக்கு தாய்பால் தானம் வழங்கிய தன்னார்வ அமைப்பு
மணப்பாறையில் தாய்பால் வார விழாவை முன்னிட்டு அரசு மருத்துவமனைக்கு தாய்பால் தானம் வழங்கிய தன்னார்வ அமைப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மணப்பாறை, திருப்பூர் மற்றும் அவினாசி கிழக்கு ரோட்டரி சங்கங்களின் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கறிஞர் கிருஷ்ணகோபால் தலைமையில் அரசு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் தாய்ப்பாலின் அவசியம் குறித்த உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சேகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் தாய்ப்பால் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டது. முதன்மை மருத்துவ அலுவலர் மருத்துவர் தமிழ்மணியிடம் ரோட்டரி மாவட்ட செயலாளர் அல்லிராணி பாலாஜி, ரோட்டரி மாவட்ட தலைவர் விசித்ரா செந்தில்குமார் ஆகியோர் தாய்ப்பால் பெட்டகத்தை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்வில் குழந்தை பெற்ற தாய்மார்கள் 90 பேருக்கு ஊட்டச்சத்து பவுடர், பழம், டவல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுப்பையும் வழங்கப்பட்டது. இதில் துணை ஆளுநர் டாக்டர் சோபனா ஆனந்த், மணப்பாறை ரோட்டரி சங்க தலைவர் சரவணக்குமார், திருப்பூர் ரோட்டரி சங்க தலைவர் ரவீந்திரன், அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் பிரகாஷ் ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.