அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இருந்த 10 கல்லூரிகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன. அதன்பிறகு இந்த கல்லூரிகளின் நிர்வாக பொறுப்பை அரசு கவனித்து வந்தாலும், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதியத்தை பல்கலைக்கழகமே வழங்கி வந்தது.
இந்தநிலையில் மேற்கண்ட அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கடந்த 22-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3-வது நாளாக அவர்களுடைய போராட்டம் நீடித்தது. இந்தநிலையில் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.