இன்று இந்தியா முழுவதும் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக சிங்காரத்தோப்பு பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும். பீமாகோரோகான் நிகழ்வில் பொய் வழக்கு புனையப்பட்ட கைது செய்யப்பட்ட 15 பேரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும், பெட்ரோல் டீசல் மீதான கலால் வரிவிதிப்பை கைவிட வேண்டும், தொழிலாளர்கள் விரோதமான 4 சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தெப்பக்குளம் தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.