திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் திருப்பைஞ்சீலி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் பழைய டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சுணைபுகநல்லூர் மேட்டு தெருவைச் சேர்ந்த மொட்டையன் என்பவர் மகன் வடிவேலு(வயது 28), முசிறி அருகே உள்ள பெரிய கொடுந்துறை அரிசன தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவர் மகன் ராகவன்(21) என்பதும் தெரியவந்தது. இருவரும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறையில் இருக்கும்போது நண்பர்களாக பழகி வந்ததும் வெளியே வந்ததும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதில், இம்மாதம் 22ம் தேதி மண்ணச்சநல்லூர் சிப்பாய் பண்ணை என்ற இடத்தில் ராணி என்பவர் வீட்டில் இருந்த இரண்டு பெண்களை பட்டாக் கத்தியை காட்டி மிரட்டி 7 பவுன் செயினை பறித்து சென்றதும், மதுரை அருகே உள்ள திருமங்கலம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளரை மிரட்டி ரூ.53 ஆயிரம் கொள்ளை அடித்து சென்றதும், மேலும் நாமக்கல், கரட்டாம்பட்டி என்ற இடங்களில் தனியாக இருந்த காதல் ஜோடியை மிரட்டி அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அந்த பெண் அணிந்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்தது சென்றதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டரை பவுன் நகை மற்றும் பட்டாக்கத்தி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை திருச்சி ஜே.எம் -1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிபதி உத்தரவின்படி முசிறி கிளை சிறையில் அடைத்தனர்.