இளையோர் தடகளப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு
திருச்சி, ஆக. 22 திருச்சி மாவட்ட அளவிலான இளையோருக்கான தட களப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு கோப்பை யும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டி புதன், வியாழன் என இரண்டு நாள்கள் நடைபெற்றன. 8,10,12,14,16,18மற்றும் 20 வயது பிரிவினருக்கான ஆண்- பெண் இருபாலருக்கும் நடைபெற்ற இந்தப் போட்டியின் தொடக்க விழாவுக்கு, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அணியின் கமாண்டர் எம்.ஆனந்தன் தலைமை வகித்து, வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
போட்டிகளை அறக்கட்டளை தலைவர் வேலு தேவர் தொடங்கி வைத்தார். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பள்ளிகளின் சார்பில் அணிகளும் பங்கேற்றன. இதில், ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென் றது. பெண்கள் பிரிவில் முசிறி அமலா மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்பெற்றது.
போட்டிக்கான பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜு தலைமையில், தடகள சங்க பொருளாளர் ரவிசங்கர், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு, பொன் மலை ரயில்வே ஏ.பி.ஓ. சுந்தரமூர்த்தி, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
வெற்றியாளர்களுக்கு பனானா லீப் மனோகரன், துணைத் தலைவர் தாமஸ் ஞானராஜ் ஆகியோர் கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கி பாராட்டினர். சங்கத்தின் உதவி செயலாளர் கனகராஜ், முனைவர் சுதமதி ரவிசங்கர், இணைச்செயலாளர் சுந்தரேசன், தடகள சங்க தொழில்நுட்ப பிரிவு ஆர். நடராஜன், முனைவர் ஹரிஹர ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக, தடகள சங்க இணை செயலாளர் எம். ரமேஷ் வரவேற்றார். முடிவில், மூத்த செயற்குழு உறுப்பினர் எஸ்.ரெங்காசாரி நன்றி கூறினார்.