மணப்பாறை அருகே ஓடும் காரில் தீடீர் தீ விபத்து
திருச்சி, செப்.8 துவரங்குறிச்சி அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்தது. பயணம் செய்தவர்கள் காரில் இருந்து இறங்கியதால் பாதிப்பு இல்லை.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை துறையூரில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர்.
திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே உள்ள சொரியம்பட்டி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது காரில் எலக்ட்ரிக்கல் சார்ட் சர்க்யூட்டாகி திடீரென காரின் முன்பகுதியில் தீப்பற்றி எரிந்தது, உடனே காரை ஓட்டுநர் சாலையோரம் நிறுத்திய நிலையில் காரில் பயணம் செய்த அனைவரும் பத்திரமாக காரை விட்டு இறங்கிவிட்டனர்.
கார் தீப்பற்றி எரிவதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ரசாயன நுரையை பீச்சி அடித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. கார் தீப்ற்றியவுடன் காரில் வந்த 5 பேரும் காரில் இருந்து இறங்கியதால் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை.
தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.