பெல் ஒப்பந்தத் தொழிலாளர்களை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணிநிரந்தரம் செய்யக்கோரி வாயிற்கூட்டம்
திருச்சி, டிச.13 திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொது துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்ப்பவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அமுல்படுத்த வேண்டும் என அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் பெல் மெயின் கேட்டு முன்பு வாயிற் கூட்டம் நடந்தது
திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்த நிலையில் தற்பொழுது சுமார் 500 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நீண்ட நாட்களாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதில் பெல் நிறுவனம் அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.
இதனை தொடர்ந்து தொழிலாளர் நல சங்கத்தினர் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 5ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நான்கு மாதத்தில் பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு உரிய அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் அதனை உடனடியாக அமல்படுத்த கோரி பெல் நிறுவன மெயின் கேட் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் பெல் தொமுச பொதுச் செயலாளர் தீபன் தலைமையில் நடந்த வாயிற் விளக்க கூட்டத்தில் பெல்வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்க பொதுச் செயலாளர் சேகர் முன்னிலை வைத்தார். மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு பெல் நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை கால தாமதப்படுத்தாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தப் பட்டது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தொழிற் சங்க கூட்டு குழு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.