திருச்சியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
திருச்சி, ஜன.1 உலகம் முழுவதும் இன்று 2026 (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது. தமிழகத்தில், சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். குறிப்பாக, மாவட்டத்தின் முக்கிய இடமான காவிரி பாலத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில், ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என வானவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
காவிரி மேம்பாலம், பாரதிதாசன் சாலை, டிவிஎஸ் டோல்கேட், ஜங்ஷன் மேம்பாலம், சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், இளைஞர்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக வாகனத்தில், அதிக ஒலிகளை எழுப்பிக் கொண்டு அதிவேகத்தில் சென்றும், பட்சாசுகளை வெடித்தும் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
இருப்பினும், புத்தாண்டு நாளில் மதுபோதையில் வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாகச் சென்ற வாகனங்களின் பதிவு எண்ணைச் சேகரித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் பல கட்டுப்பாடுகளை விதித்து, திருச்சி மாநகர் மற்றும் புறநகரின் முக்கிய பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
அதனைத்தொடர்ந்து, இன்று காலையில் கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றுள்ளனர். இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்