அடிப்படை வசதிகள் இல்லாத திருப்பைஞ்சீலி வாரச்சந்தை : வியாபாரிகள்-பொதுமக்கள் கடும் அவதி
திருச்சி, ஆக.24 திருப்பைஞ்சீலி வாரச்சந்தை பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள்- பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று காய்கறி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தில் நடைபெறும் சந்தைக்கு மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இதேபோல் திருப்பைஞ்சீலி, மூவராயன்பாளையம், வால்மால்பாளையம், குருவம்பட்டி, சித்தம்பூர், தண்டலைப்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், கீரைகள், வாழைப்பழங்கள் உள்ளிட்ட பொருட்களை இந்த சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இதன்படி 30-க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆண்கள்-பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் தேவைகளுக்காக காய்கறிகளை வாங்குவதற்கு இந்த சந்தைக்கு வருகின்றனர். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த சந்தை இரவு 8.30 மணிக்கு மேலும் செயல்படும். ஒவ்வொரு கடைக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சந்தைக்கு வரும் பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமலும், கழிவறைக்குச் செல்ல வசதி இல்லாமலும், மின்விளக்கு வசதி இல்லாமலும் தவித்து வருகின்றனர். மேலும் திறந்த வெளியாக செயல்படும் இந்த சந்தையில் மழைக்காலத்திலும் மற்றும் வெயில் காலங்களில் ஒதுங்கக்கூட வசதி இல்லாமல் பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதற்கிடையில் சந்தைக்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்தும் இடம் இல்லாமல், தாறுமாறாக நிறுத்திச் செல்வதால் போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக உள்ளது. பல நேரங்களில் வாகனங்கள் திருட்டுப் போகும் சம்பவமும் அரங்கேறி வருகின்றன. சந்தைக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்விளக்கு வசதி, வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி இந்த சந்தைக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.