திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எல்பின் நிதி நிறுவனம், தொடர்ந்து பலரை ஏமாற்றி பண மோசடி செய்துவருவதாக பொருளாதார குற்றப்பிரிவில் நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள் குவிந்துள்ளன. அந்நிறுவனம், முதலீடு செய்யும் ஒவ்வொருவருக்கும் இரண்டு மடங்காக பணத்தைத் திருப்பித் தருவதாக கொடுத்த விளம்பரத்தை நம்பி பலர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், பொதுமக்கள் முதலீடு செய்த பலகோடி ரூபாய் பணத்தைத் திருப்பித் தராமல் எல்பின் நிறுவனம் ஏமாற்றியுள்ளதாகவும், பணத்தை திருப்பித் தராமல் அலைக்கழிப்பதாகவும், பலருக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் வந்த புகார்களால் இப்பிரச்சினை பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களும், முதலீடுகளை பெற்று கொடுத்த டீம் லீடர்களும் என்று 60-க்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்சியில் உள்ள எல்பின் நிறுவனத்திற்கு வந்தனர். அவர்கள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அந்த நிறுவனத்தில் ஊழியர்கள் யாரும் இல்லை. காவலாளிகள் மட்டுமே இருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி கண்டோன்மெண்ட் உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் டீம் லீடர்கள், எங்களுக்கு 30-ந்தேதி பணம் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் 2-ந்தேதி வங்கி மூலம் பணம் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எங்களது வங்கி கணக்கு விவரம் அவர்களிடம் இல்லை. எல்பின் நிறுவன உரிமையாளர்கள் அல்லது பிரதிநிதிகள் வந்தால் மட்டுமே இந்த இடத்தை விட்டு கலைந்து செல்வோம் என்று போலீசாரிடம் கூறினார்கள்.
அவர்களிடம் கண்டோன்மென்ட் காவல்துறையினர் பலமணி நேரம் போராடி, பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் அளிக்கவில்லை. அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். இரவிலும் அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. இதனால் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.