மன்னார்குடியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

0 22
Stalin trichy visit

மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது

மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் (RDO) தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் மற்றும் கண்காணிப்பு குழுவின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம், 23.07.2026 அன்று மாலை 3.30 மணியளவில் மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் TSO வெங்கடேஸ் மன்னார்குடி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் இணைச் செயலாளர் கா. வேல்முருகன், திரு. மணிகண்டன், திருமதி டானியா, ருக்மணி கேஸ் ஏஜென்சி, மங்கை கேஸ் ஏஜென்சி ஆகிய எரிவாயு முகவர்கள், மன்னார்குடி நகராட்சி ஆணையர், காவல்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வட்ட வழங்கல் அலுவலர், உள்ளிக்கோட்டை நுகர்வோர் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மன்னார்குடி நகரின் பொதுநலன் மற்றும் நுகர்வோர் நலன் தொடர்பான பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, பொதுவெளிகளில் குப்பைகளை எரிப்பதை முற்றிலும் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனையில் கழிவறைகளை சுத்தமாகவும் முறையாகவும் பராமரிக்க வேண்டும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், உழவர் சந்தையில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும், அனைத்து கடைகளிலும் கடை எண், விலைப்பட்டியல் மற்றும் கட்டாய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்பன வலியுறுத்தப்பட்டன.
மேலும், நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் முக்கிய சாலைகளில் ஒருவழிப் பாதை (One Way) முறையை அமல்படுத்துதல், கனரக வாகனங்களின் இயக்கத்திற்கு நேரக் கட்டுப்பாடு விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்ட அலுவலர் அறிவுறுத்தியதுடன், நுகர்வோர் நலன் மற்றும் நகரின் சுகாதாரத்தை மேம்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.