ஒரே ஒரு புகைப்படம் இந்த சமூகத்தினரின் ஒட்டுமொத்த மனதையும் மாற்றும் வல்லமை படைத்தது. அந்த புகைப்படங்களை க்ளிக்கும் கைகளில் அத்தனை அற்புதங்கள் உள்ளது. பொதுவாக புகைப்படங்கள் எடுப்பவர்கள் அதனை ரசனையுடன், பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு தங்களது கையில் கைவண்ணத்தை வைத்துள்ளனர்.
ஆம், திருச்சியின் பல்வேறு பகுதிகளை அழகாக படம் பிடித்து காட்டும் இளம் வழக்கறிஞர் இவர். திருச்சி மாவட்டம் வயலூர் ரோடு சண்முக நகர் பகுதியைச் சேர்ந்தவர் நத்தானியல் ஆண்ட்ரூஸ். 24 வயதாகும் இவர் திருச்சி தேசிய சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து, தற்போது வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இருந்த போதும் தனக்கு கிடைக்கும் நேரங்களில் அனைத்தும் போட்டோகிராஃபிக்காக செலவழித்து வருகிறார். திருச்சியின் கடந்த வருட தீபாவளியில் இவர் எடுத்த புகைப்படம் ஒன்று அத்துனை அழகாக இருந்தது. அதே போல திருச்சியின் பல்வேறு பகுதிகளையும் இவரது புகைப்படங்கள் திருச்சிக்கு மேலும் பெருமை சேர்த்து வருகிறது.


இது குறித்து பேசுவதற்காக நத்தானியல் ஆண்டுருஸ் தொடர்பு கொண்டு பேசினோம்….”ஒவ்வொரு புகைப்படமும் ஆயிரம் கதைகள் சொல்லும். நான் எடுக்கும் புகைப்படத்தை வீட்டில் சென்று காண்பிக்கும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிறுவயது முதல் போட்டோகிராஃபி மீது இன்ட்ரஸ்ட் இருந்ததால் தற்போது வரை புகைப்படங்களை எடுத்து வருகிறேன். புகைப்படங்கள் எடுக்கும் போது அந்த புகைப்படங்கள் சொல்லும் கதை என்பது மிகவும் முக்கியமானது. அதனை மையப்படுத்தி தான் நான் புகைப்படங்களை எடுத்து வருகின்றேன்” என்றார்.