இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2022-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2022-ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது. இது அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை அதில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும், வருகிற 27-ந் தேதி, 28-ந் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. 01.01.2022 அன்று 18 வயது நிரம்பியவர்கள் (அதாவது, 31.12.2003 அன்றோ அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம்-6-ஐ பூர்த்தி செய்து வயது மற்றும் இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.
அயல்நாடு வாழ் வாக்காளர்கள் படிவம் 6ஏ-ல் நேரடியாக வாக்காளர் பதிவு அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளரது பெயரை நீக்கம் செய்ய படிவம்-7-ம், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய படிவம் 8-ம், சட்டப் பேரவைத் தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய இடத்தில் வசிப்பவர்கள் படிவம் 8ஏ-ம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான விண்ணப்பங்கள் வருகிற 30-ந்தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், (சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் உட்பட) வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் அலுவலகங்களில் உரிய படிவத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை கொடுக்கலாம். மேலும் www.nvsp.inஎன்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.