திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் சீரிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் தற்போது 8 லட்சத்து 50 ஆயிரத்து 202 குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உணவு பொருள் கடத்தல், கள்ளச்சந்தை வணிகம் ஆகியவற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை, மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை தேவைப்படாத குடும்ப அட்டைதார்கள் தானாக முன்வந்து, ‘உரிமம் விட்டுக் கொடுத்தல் திட்டத்தின்“ கீழ் www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும், TNEPDS என்ற செயலியிலும், தங்களின் குடும்ப அட்டையில் பதிவு செய்த கைபேசி எண்ணை உள்ளீடு செய்து, ஒரு முறை கடவுச் சொல்லை பெற்று, எந்த பொருள் எவ்வளவு காலத்திற்கு தங்களுக்குத் தேவையில்லை என்பதை ‘உரிமம் விட்டுக் கொடுத்தலில் “பதிவு செய்து, பொது விநியோகத்திட்டம் சிறப்பான முறையில் செயல்பட பங்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.