திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 843 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் தலைமை ஆசிரியர் உட்பட 35 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்திய குடியாட்சி தத்துவத்தின் மேன்மையை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் மாதிரி சட்டப்பேரவைத் தேர்தல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாதிரி தேர்தலில், தேர்தல் ஆணையர், மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் என ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்தலைப் போலவே நடைபெற்ற இந்த மாதிரி சட்டப்பேரவைத் தேர்தலில் 11 மாணவிகள், 6 மாணவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். மாணவர்கள் வாக்கு சாவடியினுள் வாக்கு சீட்டை பயன்படுத்தி வாக்குகளை பதிவு செய்தனர்.
தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யபட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவப் பிரதிநிதிகளுக்கு கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், கலை, பண்பாடு, ஒழுங்கு, சட்டம் போன்ற துறைகள் ஓதுக்கீடு செய்யப்பட்டன.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், இந்த மாதிரி சட்டப்பேரவைத் தேர்தலின் மூலம் மாணவர்களின் தலைமைப்பண்பு ஆளுமைத் திறன், தன்னம்பிக்கை உயரும், மாதிரி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற மாணவர்களில் முதல்வர், துணை முதல்வர் அறிவிக்கப்பட்டனர். மற்ற இலாக்கா மந்திரிகளை வெற்றி பெற்ற நிர்வாகம் தேர்த்தெடுக்கும். தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர்கள் எதிர் கட்சியாக செயல்படுவார்கள்.
இதன் மூலம் ஜனநாயகத்தில் மாணவ, மாணவிகளின் அடிப்படை தேவைகளை எவ்வாறு பெறுவது, எந்த நிர்வாகத்தை அனுகுவது, உரிமைகள் பறிக்கப்படும்போது அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை அறிந்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பள்ளியின், வளர்ச்சிக்கும், கட்டமைப்புக்கும், மாணவர்களின் வளர்ச்சிக்கான நோக்கமே இந்த மாதிரி சட்டப்பேரவை தேர்தல். மேலும் மாணவ, மாணவிகளுக்கு ஜனநாயக பண்புகளை கற்றுக் கொடுக்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தில் இந்த மாதிரி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு பாடமாக அமைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். என பள்ளி தலைமையாசிரியர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ் அரசுக்கு கோரிக்கையாக வைத்தார்.