மணப்பாறை உழவர் சந்தையில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு
திருச்சி, அக். 16 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் உள்ள பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் குடியிருப்புகளை நோக்கி வரத்துவங்கியுள்ளன.
இந்நிலையில் இன்று பூங்கா சாலையில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைக்கு கட்டுவிரியன் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. பாம்பைக் கண்டு அலறிய வியாபாரிகள் மணப்பாறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
ஆனால் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் பாம்பு செடிகளின் புதரில் சென்று மறைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் புதரில் பாம்பைதேடி பாம்பு பிடிக்கும் கருவி மூலம் லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்று பொய்கைமலை வனப்பகுதியில் விடுவித்தனர். உழவர் சந்தையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் மண்டிக்கிடப்பதால் அதனை வெட்டி சுத்ததம்செய்து பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.