திருச்சியில் பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்..! 22 மாணவர்கள் காயம்..!
ஏப்ரல்.05, திருச்சி மாவட்டம் துப்பாக்கி தொழிற்சாலை அருகே உள்ள ஜெயந்தி வித்யாலயா பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அப்பள்ளியைச் சேர்ந்த 22 மாணவர்கள் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் துப்பாக்கி தொழிற்சாலை அருகே உள்ள ஜெயந்தி வித்யாலயா பள்ளி வேன் இன்று காலையில் சுமார் 22 மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அந்த வேன் திருச்சி மாவட்டம் மாத்துார் அருகே உள்ள குமாரமங்களம் பகுதியில் சென்ற போது பள்ளத்தில் கவிழ்ந்து வேன் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த சுமார் 22 மாணவர்களும் காயமடைந்தனர். அவர்களை உடனடியாக அந்தப்பகுதி மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, மாத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் வழக்கமாக வரும் ஓட்டுநர் விடுப்பெடுத்த நிலையில், அவருக்குப் பதிலாக மாற்று ஓட்டுநரால் அவ்வேன் இயக்கப்பட்ட நிலையில், குறுகிய பகுதியில் வேகமாக வேனை இயக்கியதால், வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்றும், தெரிவித்தனர். மற்றும் தப்பியோடிய ஓட்டுநரை தீவிரமாகத் தேடி வருவதாகவும் அவ்விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.