திருச்சி மாநகரில் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் சமீப காலமாக அதிக அளவில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அச்சத்துடனே வெளியே செல்லும் நிலை உள்ளது. இதில் அரசு மருத்துவமனை ரோடு, ஆழ்வார்தோப்பு , சங்கிலியாண்டபுரம், ஓயாமரி சுடுகாடு, மரக்கடை, கூனிபஜார், பொன் நகர், திருச்சி ஜங்சன் ரெயில்வே பகுதி, மிளகுபாறை, கொட்டபட்டு இந்திரா நகர், மொராய்ஸ் கார்டன் ரன்வே நகர் என மாநகர் முழுவதும் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றன.
இந்நிலையில் திருச்சி பெரிய சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் பாண்டி இவரது மகள் சிவன்யா (வயது 3½). இவர் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று சிவன்யாவை விரட்டி சென்று கடித்து குதரியது. இதில் அந்த சிறுமிக்கு முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த தெரு நாயை விரட்டினர். பின்னர் அந்த சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தாததால் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடக்கவே அச்சப்படுகின்றனர். இந்த பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் கூறுகையில், திருச்சி பெரிய சவுராஷ்டிரா பகுதியை சேர்ந்த சிவன்யா என்ற சிறுமியை தெருநாய் கடித்ததாக புகார் வந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து செயல் பட்டு அந்த தெருநாயை பிடித்துள்ளனர். மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும்.
மேலும் உறையூர் கோணக்கரை பகுதியில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அருகில் மேலும் ஒரு புதிய கருத்தடை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அடுத்து வரும் நாட்களில் தெருவில் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய தீவிர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இனி நாய் தொல்லை படிப்படியாக குறைந்து விடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.