சுதந்திர தினத்திற்கு விடுமுறை அளிக்காத 186 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
சென்னை தொழிலாளர் ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் டாக்டர் அதுல்ஆனந்த், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் ஆகியோர் அறிவுரைப்படி, திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் தலைமையில், தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்களுடன் தேசிய விடுமுறை தினமான ேநற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட 228 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 186 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இனி வரும் தேசிய விடுமுறை நாட்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தேசிய விடுமுறை நாட்களில் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்காமல் பணிபுரிய நிர்ப்பந்திக்கும் வர்த்தக நிறுவனங்கள் மீது 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை) சட்டத்தின் கீழ் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் ( சட்ட அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.