காட்டுப்புத்தூர் ஜமீந்தார் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திருச்சி, ஆக.24 திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் ஜமீந்தார் மேல்நிலைப்பள்ளியில் 2003-2005-ம் கல்வியாண்டை சேர்ந்த முன்னாள் மாணவர்களின் 20-ம் ஆண்டு மறுசந்திப்பு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி மற்றும் தாளாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் தங்களது பழைய வகுப்பறையில் அமர, ஆசிரியர்கள் மீண்டும் பாடம் எடுப்பது போலவும், தாமதமாக வந்த மாணவரை ஆசிரியர் பிரம்பால் அடிப்பது போலவும் தத்ரூபமாக செயல்பட்டது, அனைவரையும் நெகிழ்ச்சியிலும், சிரிப்பலையிலும் ஆழ்த்தியது.
தொடர்ந்து, ஜப்பானில் நடைபெற்ற உலக அறிவியல் மாநாட்டில் போலியோ தடுப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைக்காக நோபல் விஞ்ஞானிகளிடம் முதல் பரிசு பெற்று, தற்போது முசிறி அரசு கல்லூரியில் வேதியியல் துணை பேராசிரியராகப் பணியாற்றும் முன்னாள் மாணவி செல்விக்கு ஆசிரியர்களும், சக மாணவர்களும் சிறப்புப் பரிசு வழங்கிப் பாராட்டினர்.
பல்வேறு ஊர்களில் இருந்தும் குடும்பத்தினருடன் வந்திருந்த முன்னாள் மாணவர்கள், தங்களை நல்வழிப்படுத்திய ஆசிரியர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் வழங்கி நன்றி தெரிவித்தனர்.
விழாவினை தீபன் சக்கரவர்த்தி, தண்டபாணி, நந்தகுமார், கவுதமன், தமிழரசன், கார்த்தி, வினு பிரியா, கிருத்திகா மற்றும் கவிதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.